ஆந்திர பிரதேசம்: 11 ஆண்டுகளாக மனைவியை இருட்டு அறையில் பூட்டி வைத்து... வழக்கறிஞரின் கொடுமை

ஆந்திர பிரதேசத்தில் தனது மனைவியை 11 ஆண்டுகளாக வழக்கறிஞரான கணவர் இருட்டு அறையில் பூட்டி வைத்த அவலம் தெரிய வந்து உள்ளது.

Update: 2023-03-04 05:36 GMT



விசாகப்பட்டினம்,


ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் கோதாவரி மதுசூதன். வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி சாய் சுப்ரியா. இந்த நிலையில், தங்களது மகளான சுப்ரியாவை எங்கே? என அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் மதுசூதனிடம் கேட்டு உள்ளனர்.

ஆனால், அவரிடம் இருந்து பதில் வரவில்லை. இதனால், அவர்கள் போலீசை தொடர்பு கொண்டுள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரிக்க வந்தபோது, வாரண்ட் இல்லாமல் வீட்டுக்கு வர கூடாது என கூறி வழக்கறிஞர் மதுசூதன் அவர்களை தடுத்து உள்ளார்.

இதன்பின், சுப்ரியாவின் பெற்றோர் மற்றும் போலீசார் கோர்ட்டை அணுகி, வாரண்ட் பெற்று வந்து, அடுத்த நாள் மதுசூதன் வீட்டில் சோதனை செய்து உள்ளனர்.

இதில், இருட்டு அறை ஒன்றில் முடங்கிய நிலையில், சாய் சுப்ரியா இருந்தது தெரிய வந்து உள்ளது. அவர் அந்த அறையில் கணவரால் அடைத்து வைக்கப்பட்டு உள்ளார். 11 ஆண்டுகளாக அறைக்குள்ளேயே அவர் வசித்து வந்து உள்ளார் என்ற அதிர்ச்சி விவரமும் தெரிய வந்து உள்ளது.

இதனை தொடர்ந்து மதுசூதன் மீது கோர்ட்டு உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதன்பின்பு சுப்ரியா விடுவிக்கப்பட்டு உள்ளார்.

சுப்ரியா கூறும்போது, நான் எனது குழந்தைகளை அழைத்து கொண்டு எனது வீட்டுக்கு செல்ல விரும்புகிறேன். நல்ல வேளையாக இந்த இடத்தில் இருந்து வெளியே வந்து விட்டேன். அது நான் செய்த அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்