ஆந்திர பிரதேசம்: முதல்-மந்திரி ஸ்டிக்கரை கடித்த நாய்; கொதித்தெழுந்த மகளிர் போலீசில் புகார்

ஆந்திர பிரதேசத்தில் சுவரில் ஒட்டியிருந்த முதல்-மந்திரியின் ஸ்டிக்கரை கடித்த நாயை கைது செய்ய கோரி பெண்கள் சிலர் திரண்டு போலீசில் புகார் அளித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.;

Update: 2023-04-15 05:51 GMT

விஜயவாடா

ஆந்திர பிரதேசத்தில் விஜயவாடா மத்திய தொகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் திரண்டு சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், ஆந்திர பிரதேச முதல்-மந்திரியின் ஸ்டிக்கர் ஒன்றை நாய் கடித்து, கிழித்து உள்ளது.

இதனால், அந்த நாயை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் முறையிடப்பட்டு இருந்தது. சமீபத்தில், தனது அரசாங்கத்தின் நல திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, ஆந்திர பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமம் மற்றும் வீட்டிலும், 'ஜெகன் நம்முடைய வருங்காலம்' என்ற போஸ்டரை ஒட்டும்படி உத்தரவிட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தன்னார்வலர்கள் என அவர்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று இந்த ஸ்டிக்கர்களை வீடுகளில் ஒட்டி வருகின்றனர்.

இப்படி போய் கொண்டிருக்கும்போது, விஜயவாடா மத்திய தொகுதியை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து இந்த புகாரை அளித்து உள்ளனர். இதுபற்றி விஜயவாடாவை சேர்ந்த தாசரி உதயஸ்ரீ என்பவர் கூறும்போது, நாங்கள் நாய் மீது புகாரளிக்க வந்தோம்.

முதல்-மந்திரியின் ஸ்டிக்கரை நாய் கிழித்தது அறிந்து, நாங்கள் வேதனையுற்றோம். ஆந்திர பிரதேசத்தில் 155 தொகுதிகளில் வெற்ற பெற்ற ஒரே முதல்-மந்திரியான ஜெகன் அண்ணாவை அந்த நாய் அவமதிப்பு செய்து விட்டது.

அந்த நாயை தூண்டி விட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தி, சிறையில் அடைக்க வேண்டும். ஜெகனின் ஸ்டிக்கரை தொடும் ஒவ்வொருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என எம்.எல்.ஏ. மல்லாடி விஷ்ணுகாரு மிரட்டி வருகிறார்.

அதனால் தற்போது எந்த சிறையில் இந்த நாயை தள்ள போகிறீர்கள் என கூற வேண்டும். எங்களுடைய புகாரை காவல் அதிகாரி பெற்று விட்டார். நாயை கொண்டு வந்து, நடவடிக்கை எடுக்கும்படி அவரிடம் கேட்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலானதும் பலரும் பல விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர், நம்முடைய முதல்-மந்திரியை அவமதிப்பு செய்த நாய்க்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர். சிலர், நாய் மீது புகார் அளிப்பது எல்லாம் வித்தியாசம் ஆகவுள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்