மேலும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிக்க வாய்ப்பு
வாக்காளர்களின் தகவல்கள் திருட்டு விவகாரத்தில் மேலும் சில ஐ.ஏ.ஸ் அதிகாரிகளை சிக்க வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு-
பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் மற்றும் வாக்காளர்களின் பெயர்களை நீக்கிய விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் வாக்காளர்களின் தகவல்கள் திருட்டு மற்றும் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்துவதற்காக மாநகராட்சியில் பணி புரியாத உயர் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்திலும், பெயர்களை நீக்கிய விவகாரத்திலும் மாநகாட்சியின் முக்கிய அதிகாரிகள் மற்றும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலுமே நிறுவனத்துடன் நேரிடையாக தொடர்பில் இருந்ததுடன், அந்த நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேரிடையாக தலையிட்டு விசாரணை நடத்தி வருவதால், பெங்களூருவில் நடைபெற்ற இந்த முறைகேட்டில் தொடர்புடைய மேலும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.