இந்தியாவில் மேலும் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு - தொற்றால் 3 பேர் பலி
இந்தியாவில் நேற்று மேலும் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.;
புதுடெல்லி,
நாட்டில் நேற்று முன்தினம் 1,223 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மேலும் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 628 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் தினசரி பாதிப்பு 1.02 சதவீதமாக பதிவாகி உள்ளது. தொற்றில் இருந்து நேற்று 2,252 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 33 ஆயிரத்து 389 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 983 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 515 ஆக குறைந்துள்ளது.
தொற்றினால் கடந்த பல நாட்களாக இரண்டு இலக்கத்தில் இறப்பு பதிவாகி வந்தது. நேற்று முன்தினம் 14 பேர் இறந்தனர். நேற்று பஞ்சாப்பில் 2 பேர், மேற்கு வங்காளத்தில் ஒருவர் என நாட்டில் 3 பேர் மட்டுமே தொற்றால் பலியாகினர். தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.