முருக மடாதிபதி விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

முருக மடாதிபதி விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-04 14:44 GMT

கொள்ளேகால்;

அனைவருக்கும் கல்வி

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா மாதேஸ்வரன் மலை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரா கோவிலில் நடந்த கலாசார விழாவில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:-

மின்சாரம், சாலை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கிராமங்கள் மாதேஸ்வராவின் அருளால் வளர்ச்சி அடைந்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கல்வியை புறக்கணிக்கக்கூடாது. அனைவரும் கல்வி கற்க வேண்டும். அனைவருக்கும் கல்வி அளிக்கும் பணியை அரசு செய்கிறது. குழந்தைகள் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்வது சரியல்ல. அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

சீரமைப்பு பணிகள்

1932-ம் ஆண்டு தொடங்கிய சாளூர் மடம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த மடத்தின் மூலம் பல வளர்ச்சி பணிகள் நடந்து வருவது பாராட்டுக்குரியது.

ஹனூர் தாலுகாவில் பல பள்ளிகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. அந்த பள்ளிகளின் பட்டியலை தயாரித்து விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் பேசுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.


பாரபட்சமற்ற விசாரணை

முன்னதாக மந்திரி பி.சி.நாகேஸ், கொள்ளேகாலில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அலுவலகத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், இப்படி ஒரு கல்வி அதிகாரி அலுவலகத்தை நான் பார்த்தது இல்லை. இந்த அலுவலகம் மாநிலத்துக்கே முன்மாதிரியாக உள்ளது என்றார்.

இதையடுத்து சித்ரதுர்கா முருக மடாதிபதி மீதான பாலியல் வழக்கு தொடர்பாக நிருபர்கள், மந்திரி பி.சி.நாகேசிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், 'முருக மடாதிபதி விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற அரசு முயற்சி செய்யவில்லை.

இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும். மாநிலத்தில் போலீஸ் துறை சிறப்பாக செயல்படுகிறது. குறை கூற வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாவற்றுக்கும் குறை மட்டும் தான் கூறுவார்கள்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்