விடுதி தோழிகளை படம் பிடித்து காதலருக்கு அனுப்பிய என்ஜினீயரிங் மாணவி

பல்கலைக்கழகத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவி விடுதி வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதுடன், சஸ்பெண்டும் செய்யப்பட்டு இருக்கிறார்.;

Update:2024-05-09 22:59 IST

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் சி.ஓ.இ.பி. என்ற பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள விடுதியில் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், என்ஜினீயரிங் படித்து வரும் மாணவி ஒருவர், தன்னுடன் விடுதி அறையை பகிர்ந்து கொண்ட தோழிகளின் புகைப்படங்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்துள்ளார்.

இதன்பின்னர், அவற்றை பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருக்கும் தன்னுடைய காதலருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதுபற்றி அறிந்ததும் சக தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக நடந்த சம்பவம் பற்றி பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகளிடம் முறையிட்டனர். இதனை தொடர்ந்து, உள்மட்ட அளவிலான விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இதுபற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், அனைவருக்கும் பாதுகாப்பு, மதிப்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றுக்கான சூழலை உருவாக்கி தருவதில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறோம்.

அந்த வகையிலான அணுகுமுறையின்படி, கடுமையான நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். போலீசிலும் புகார் அளித்து இருக்கிறோம். குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவியை விடுதி வளாகத்திற்குள் நுழைய தடை விதித்திருக்கிறோம்.

அவருக்கு எதிராக விசாரணை நடந்து வரும் நிலையில், பல்கலைக்கழகத்தில் இருந்து அவரை சஸ்பெண்டு செய்திருக்கிறோம். ஒரு பாதுகாப்பான மற்றும் மதிப்புமிக்க வளாக சூழலை பராமரிப்பதில் ஈடுஇணையற்ற வகையில் செயல்படுவதில் மீண்டும் நாங்கள் உறுதி கூறுகிறோம்.

இதனால், துன்புறுத்தல் அல்லது சுரண்டலுக்கான அச்சமின்றி அனைத்து தனிநபர்களும், கல்வி மற்றும் தனிப்பட்ட இலக்குகளை தொடர முடியும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த விவகாரத்தில் ஐ.பி.சி.யின் பிரிவு 354(சி) மற்றும் ஐ.டி. சட்டத்தின் கீழ், புகைப்படங்களை எடுத்தல் மற்றும் தகவல் செயலி வழியே காதலருக்கு அவற்றை அனுப்புதல் ஆகியவற்றிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். எனினும், அதில் ஆபாச புகைப்படங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்