நில வருவாய் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்
விவசாய நிலத்தை மற்ற பணிகளுக்கு பயன்படுத்த வசதியாக நில வருவாய் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
நில சட்டம்
கர்நாடக பட்ஜெட் அறிவிப்பின்போது முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:-
கர்நாடகத்தில் வருவாய் துறையின் கீழ் பொதுமக்களுக்கான சேவை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றை வெளிப்படத்தன்மையுடனும், ஊழலற்ற முறையில் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய நிலங்களை, இதர பணிகளுக்கு (விவசாயம் சாராத பணிகள்) பயன்படுத்துவதற்கு நிலத்தின் உரிமையாளரிடம் விண்ணப்பம் பெறப்பட்டு மாற்றப்படும். அதுதொடர்பாக மாநில நில வருவாய் சட்டத்தில், பிரிவு-95 திருத்தம் செய்யப்படும்.
தாலுகா வளாகங்கள்
எஸ்.சி.மற்றும் எஸ்.சி. பிரிவினர், தாங்கள் இழந்த நிலத்தை மீட்கும் வகையில் சட்டதிருத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். மாவட்ட அலுவலக வளாகங்களில் அனைத்து அரசு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த கட்டிடம் அமைக்கப்படும். மாநில அரசு சார்பில் உதயமா சக்தி திட்டத்தின் கீழ் 100 இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கான நிலங்கள் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு துரிதமாக ஒதுக்கப்படும். வெள்ளம், வறட்சி மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை பேரிடரை எதிர்கொள்ளும் விதமாக ரூ.422 கோடி செலவில் பல்வேறு தடுப்பு பணிகள் நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்படும்.
பருவநிலை கண்காணிப்பு
தீயணைப்பு மற்றும் மீட்பு துறையை பலப்படுத்தும் விதமாக தேசிய பேரிடர் தடுப்பு நிதியில் இருந்து ரூ.721 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக பெங்களூரு உள்பட மாநிலத்தில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு பருவநிலை கண்காணிப்பு ரேடார் தொழில்நுட்பம் அமைக்கப்படும்.
மைசூருவில் உள்ள உலகபுகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக அந்த கோவில் மற்றும் மலைப்பகுதியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். கோவில் கட்டுமானங்களுக்கு பிற மாநிலங்களில் இருந்து சிற்பிகளை அழைத்து வரவேண்டி உள்ளது. அதற்கு பதிலாக கோலார் மாவட்டத்தில் சிற்ப பயிற்சி மையம் நிறுவப்படும். அங்கு நமது மாநிலத்திற்கு நாமே சிற்பியை உருவாக்குவோம்.
வருவாய் அடிப்படையில் கோவில்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதை ஒழுங்குப்படுத்தி சீரான மானியமாக சி-பிரிவு கோவில்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.