வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற அம்ரித்பால் சிங்கின் மனைவியிடம் ஏர்போர்ட்டில் விசாரணை
பஞ்சாப்பின் அமிர்தசரசில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற அம்ரித்பால் சிங்கின் மனைவியை ஏர்போர்ட்டில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.;
சண்டிகர்,
பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி லவ்பிரீத் சிங். வழக்கு ஒன்றில் அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரை மீட்க, அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவற்றை ஏந்திய ஆதரவாளர்களுடன் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு அம்ரித்பால் சிங் உள்ளே புகுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில், அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் சூப்பிரெண்டு அளவிலான காவல் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர். இதனால், பஞ்சாப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை கூறி வந்தன.
இந்த விவகாரத்தில் போலீசார் தனிப்படை அமைத்து சிங்கை தேடி வந்தனர். ஆனால், அவர் இன்னும் போலீசில் சிக்கவில்லை. இதனால், அவர் தப்பியோடிய குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
எனினும், அவரோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், அம்ரித்பால் சிங்கின் மனைவி கிரண்தீப் கவுர், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்று உள்ளார். இதற்காக விமானம் ஒன்றை பிடிப்பதற்காக அவர் புறப்பட்டு சென்று உள்ளார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், குடியுரிமை துறை அதிகாரிகள் அம்ரித்பால் சிங்கின் மனைவியை வழியிலேயே தடுத்து நிறுத்தி அவரை பிடித்து சென்றனர். இதுபற்றி பஞ்சாப் போலீசார் கூறும்போது, அம்ரித்பால் மனைவி இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரிடம் குடியுரிமை துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறியுள்ளனர்.
சமீபத்தில் அம்ரித்பாலின் நெருங்கிய உதவியாளரான பப்பல்பிரீத் சிங் என்பவர், ஹோஷியார்பூரில் இருந்து சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அம்ரித்பால் சிங்கின் மற்றொரு முக்கிய கூட்டாளியான ஜோகா சிங் என்பவரை சர்ஹிந்த் பகுதியில் வைத்து பஞ்சாப் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.