அசாமில் உள்ள திப்ருகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட அம்ரித்பால் சிங்
அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் சிறைக்கு அம்ரித்பால் சிங்கை போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.;
திஸ்பூர்,
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்தனர். போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் மோகாவில் சரணடைந்த அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அம்ரித் பால் சிங் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதன் மூலம் அவரை எந்த விசாரணையும் இன்றி ஒரு ஆண்டு காலம் சிறையில் அடைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அம்ரித்பால் சிங்கை அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் சிறைக்கு போலீசார் கொண்டு சென்றுள்ளனர். திப்ருகார் மத்திய சிறையானது வடகிழக்கு இந்தியாவின் பழமையான சிறைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
அசாமில் ஏற்பட்ட கிளர்ச்சியின் போது பயங்கரவாதிகளை காவலில் வைக்க பயன்படுத்தப்பட்ட திப்ருகார் சிறை, தற்போது குறிப்பிடத்தக்க அளவில் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்ரித்பால் சிங்குடன் மேலும் 9 காலிஸ்தான் ஆதரவாளர்கள் அசாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.