அமித் ஷா கண்டித்தாரா? தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி கேட்பதற்காக தன்னை அமித் ஷா அழைத்ததாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.;
சென்னை:
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கலந்துகொண்டார். அவர் மேடையில் இருந்த தலைவர்களுக்கு மரியாதை அளித்தபடி சென்றபோது, உள்துறை மந்திரி அமித் ஷா, தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து விரலை நீட்டியபடி தீவிரமாக ஏதோ கூற, அதற்கு தமிழிசை பதில் அளித்தார். இந்த வீடியோ கிளிப் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த பலரும், தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டித்ததாக பேசத் தொடங்கினர். இதனால் தமிழக பா.ஜ.க.விலும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக ஆந்திராவில் உள்துறை மந்திரி அமித் ஷாவை நேற்று நான் சந்தித்தேன். அப்போது, தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி கேட்பதற்காக என்னை அழைத்தார். நான் விரிவாக கூறினேன். அப்போது, நேரமின்மை காரணமாக, மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளைத் தீவிரமாகச் செய்யுமாறு அறிவுறுத்தினார். தேவையற்ற யூகங்கள் பரவுவதால் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.