3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக அமித்ஷா தலைமையில் ஆய்வு கூட்டம்

திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

Update: 2023-12-22 21:14 GMT

புது டெல்லி,

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்தது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் நாடாளுமன்ற நிலைக்குழு (உள்துறை) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இக்குழு சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் சண்டிகரில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மற்றும் உள்துறை அமைச்சகம் மற்றும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தனது எக்ஸ் வலைதளத்தில், "நாடாளுமன்றத்தில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் இன்று (நேற்று) சண்டிகரில் இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது மற்றொரு பதிவில், கூட்டத்தில் உள்கட்டமைப்பு, மென்பொருள், மனிதவளப் பயிற்சி மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் சட்ட அமலாக்கத்திற்கான நீதிமன்றங்களை 2024 டிசம்பருக்குள் முழுமையாக கணினிமயமாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்