பொதுமக்களுக்காக இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த டீக்கடை உரிமையாளர்
கடூரில், பொதுமக்களுக்காக இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த டீக்கடை உரிமையாளருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
சிக்கமகளூரு:
கடூரில், பொதுமக்களுக்காக இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த டீக்கடை உரிமையாளருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
டீக்கடை உரிமையாளர்
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருபவர் மஞ்சுநாத். இவரது தந்தை கடந்த 2019-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் அவதி அடைந்தார். அப்போது அவரை தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதிக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் அரசு ஆம்புலன்சில் தனது தந்தை மங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதிக்க உதவி செய்ய வேண்டும் என்று மஞ்சுநாத், டாக்டர்களிடம் கோரிக்கை விடுத்தார். ஆனாலும் அவருக்கு ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. இதையடுத்து மிகவும் சிரமப்பட்டு மஞ்சுநாத், தனது தந்தையை மங்களூருவுக்கு கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். பின்னர் அவரை அங்கிருந்து டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக சிவமொக்கா மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாராட்டு
ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மஞ்சுநாத்தின் தந்தை பரிதாபமாக இறந்து போனார். தனது தந்தைக்கு உரிய நேரத்தில் சரியான சிகிச்சை கிடைக்காமல் இறந்ததுபோல் வேறு யாருக்கும் நேர்ந்து விடக்கூடாது என்று எண்ணிய மஞ்சுநாத், தனது சொந்த செலவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இலவசமாக ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அந்த ஆம்புலன்சுக்கு தனது சொந்த செலவிலேயே டிரைவர் ஒருவரையும் பணிக்கு அமர்த்தி இருக்கிறார். நேற்று அந்த ஆம்புலன்ஸ் வாகனம் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து மஞ்சுநாத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.