இலவச கல்வி அளித்து நான் ஏதேனும் தவறு செய்கிறேனா? மக்களிடம் கெஜ்ரிவால் கேள்வி

இலவச கல்வியை அளித்து நான் ஏதேனும் தவறு செய்து கொண்டிருக்கிறேனா? என குஜராத்தில் பேசிய டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மக்களிடம் கேட்டுள்ளார்.;

Update: 2022-08-06 12:47 GMT



வதோதரா,



குஜராத்தில் 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தலை மாநிலம் சந்திக்க உள்ளது. இதற்கான தேர்தல் ஆயத்த பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை பா.ஜ.க.வுக்கு போட்டியாக ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இதன்படி குஜராத்துக்கு கடந்த ஜூலை 21ந்தேதி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் சூரத் நகரில் மக்களிடையே கூட்டத்தில் பேசும்போது, அனைத்து உள்ளூர் நுகர்வோர்களுக்கும் நாங்கள் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என கூறினார்.

இதுதவிர, அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் 24x7 என்ற வகையில் மின்சார வினியோகம் கிடைக்க உறுதி செய்வோம். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி வரையிலான நிலுவையிலுள்ள அனைத்து மின் கட்டண பில்களையும் தள்ளுபடி செய்வோம் என கூறி ஆச்சரியம் ஏற்படுத்தினார்.

இந்த கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், சில பேர் ரேவரி (இனிப்பு) வழங்குவது பற்றி பேசி வருகின்றனர். பொதுமக்களுக்கு இலவச அடிப்படையில் இனிப்பு வழங்கும்போது, அதற்கு பெயர் பிரசாதம் (பக்தியுடன் வழங்குவது). ஆனால், உங்களது சொந்த நண்பர்கள் மற்றும் மந்திரிகளுக்கு அதனை இலவச அடிப்படையில் வழங்கும்போது, அதற்கு பெயர் பாவம் என கூறினார்.

அதற்கு சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இலவசங்களை வழங்கும் அரசியல் கட்சிகள் ஆபத்து நிறைந்தவை என குறிப்பிட்டார். அதற்கு பதிலடியாக கெஜ்ரிவால், மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவற்றை மக்களுக்கு தரமுடன் வழங்கி வருகிறோம். இது இலவசம் ஆகாது என கூறினார்.

இந்நிலையில், கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, குஜராத்தில் 27 ஆண்டுகளாக பா.ஜ.க. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என கூறியுள்ளார். அவர்கள் ஆணவத்துடன் நடந்து வருகின்றனர்.

டெல்லி முதல்-மந்திரியாக இருந்தும் கூட குஜராத்தில் விஷ சாராயத்தில் பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்தேன். இந்த சம்பவத்தில், குஜராத் முதல்-மந்திரி அவர்களை சந்திக்க கூட செல்லவில்லை. தற்போது அவர்களுக்கு மாற்று ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

வாராவாரம், குஜராத்திற்கு செல்லும் வழக்கத்திற்கு கெஜ்ரிவால் மாறியுள்ளார். இதற்கு முன்பு, குஜராத்திற்கு வருகை தந்த கெஜ்ரிவால் தேர்தலுக்கு முன் 2 வாக்குறுதிகளை அளித்துள்ளார். அவற்றில் ஒன்று, 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது. மற்றொன்று, அனைத்து வேலையில்லா நபர்களுக்கும் வேலை அல்லது மாதம் ஒன்றிற்கு ரூ.3 ஆயிரம் வழங்குவது ஆகும்.

இந்நிலையில், இந்த முறை குஜராத் பயணத்தில் கெஜ்ரிவால் 3வது வாக்குறுதியாக என்ன வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். அவர், குஜராத்துக்கு இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். எனினும், இந்த முறை பழங்குடியின மக்களுக்கு ஆதரவான உத்தரவாதம் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குஜராத்தில் கூட்டத்தின் முன் கெஜ்ரிவால் இன்று பேசும்போது, இலவச இனிப்புகள் பற்றி இந்த நாட்களில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகின்றன. டெல்லி அரசு பள்ளி கூடங்களை நாங்கள் உருமாற்றி இருக்கிறோம். ஐ.ஐ.டி. மற்றும் நீட் தேர்வில் இந்த வருடம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சியடைந்து உள்ளனர். தெளிவுடன் மாணவர்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். இலவச கல்வியை அளித்து நான் ஏதேனும் தவறு செய்து கொண்டிருக்கிறேனா? என்று அவர் மக்களிடையே கேட்டுள்ளார்.

கெஜ்ரிவாலின் 2 நாள் சுற்றுப்பயணத்தில் 3வது வாக்குறுதியும் அறிவிக்கப்படும். இந்த வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் அமல்படுத்தப்படும் என ஆம் ஆத்மி வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்