விவசாயிகளின் ஆயுள் காப்பீட்டிற்காக ரூ.180 கோடி நிதி ஒதுக்கீடு - பசவராஜ் பொம்மை பேச்சு
பூஜ்ஜிய வட்டியில் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கப்படுவதாக கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.;
விஜயாப்புரா,
விஜயாப்புரா மாவட்ட நிர்வாகம் சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா முத்தேபிகாலில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நாட்டில் 12 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மேலும் 25 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். ஜலதாரே திட்டத்தின் கீழ் நகரங்களில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் கோடியில் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 53 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பூ சக்தி(நில சக்தி) திட்டத்தின் கீழ் உரம், விதைகள் வாங்க விவசாயிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறோம். விவசாயிகளின் ஆயுள் காப்பீட்டிற்காக ரூ.180 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பூஜ்ஜிய வட்டியில் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. சிறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளோம். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தொழில் செய்ய ரூ.20 ஆயிரம் வழங்குகிறோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.