அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு: தனியார் பஸ்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை

அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டை அடுத்து தனியார் பஸ்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2022-08-28 21:56 GMT

பெங்களூரு: பெங்களூரு உள்பட நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, பெங்களூருவில் வசித்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட மாநிலத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதனை பயன்படுத்தி தனியார் பஸ்களில், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக தனியார் பஸ்களில் பயணிகளிடம் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து மாநிலத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்ற தனியார் பஸ்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

பஸ்களில் இருந்த பயணிகளிடம் டிக்கெட்டுகளை பெற்று, எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்ற தகவல்களை கேட்டு பெற்றுக் கொண்டனர். பின்னர் பஸ்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள், ஏஜென்டுகளிடம் பயணிகளிடம் வசூலித்த கூடுதல் கட்டணத்தை திரும்ப கொடுக்கும்படி உத்தரவிட்டனர். இதுபோன்று அதிக கட்டணம் வசூலித்தால் பஸ்சுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தார்கள். அதே நேரத்தில் விநாயகர் சதுர்த்தி வரை தனியார் பஸ்களில் சோதனை நடத்தப்படும் என்றும், அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்