உத்தரகாண்ட்: பிரிட்டிஷ் காலனித்துவத்தின் அனைத்து சின்னங்களின் பெயர்கள் மாற்றப்படும் - புஷ்கர் தாமி
உத்தரகாண்டில் உள்ள பிரிட்டிஷ் காலனித்துவத்தின் அனைத்து சின்னங்களும் பெயர் மாற்றம் செய்ய உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில், உத்தரகாண்டில் உள்ள பிரிட்டிஷ் காலத்தின் அனைத்து சின்னங்களும் பெயர் மாற்றம் செய்ய உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாநில துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து நாட்டில் உள்ள காலனித்துவத்தின் பழைய சின்னங்கள் மாற்றப்படுகின்றன. அதேபோல், உத்தரகாண்டில் உள்ள அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளையும் இது போன்ற சின்னங்கள் குறித்த விவரங்களை தொகுத்து, அறிக்கை சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
உத்தரகாண்டில் பல சாலைகள், நகரங்களுக்கான பெயர்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மாற்றப்பட்டன. காலனி ஆதிக்கத்தின் அடையாளங்கள் நமக்கு தேவை இல்லை. அந்த பெயர்கள் மாற்றப்பட்டு, வேறு பெயர்கள் சூட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.