பிரதமர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள 'இந்தியா கூட்டணி' திட்டம்- அமித்ஷா

இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் தேவை, ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை என்று அமித்ஷா கூறினார்.

Update: 2024-05-17 05:34 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் மதுபானி மக்களவை தொகுதியில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- 'இந்தியா' கூட்டணியில் பிரதமர் பதவிக்கு ஆள் இல்லை. மோடியை 3-வது தடவையாக பிரதமர் ஆக்க நாடு முடிவு செய்துள்ளது. ஆனால், இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா?

அவர்கள் எப்படியும் ஆட்சியை பிடிக்க போவதில்லை. இருந்தாலும் ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். மம்தா பானர்ஜி பிரதமர் ஆவாரா? மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆவாரா? லாலுபிரசாத் பிரதமர் ஆவாரா?அவர்கள் பிரதமர் பதவியை ஆண்டுக்கு ஒருவர் வீதம் தங்களுக்குள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். மீண்டும் கொரோனா போன்ற சூழ்நிலை வந்தால், அவர்களால் நாட்டை காப்பாற்ற முடியுமா? பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க முடியுமா?இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் தேவை. ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை விதித்தது சரியான முடிவு. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்