விமானத்தில் இனி செல்லப்பிராணிகள் பயணம் செய்ய அனுமதி- ஆகாசா ஏர் நிறுவனம் அறிவிப்பு

செல்லப்பிராணிகளை விமானங்களில் அனுமதிக்கும் இரண்டாவது விமான நிறுவனமாக ஆகாசா ஏர் மாறியுள்ளது.

Update: 2022-10-06 12:01 GMT

Image Courtesy: PTI  

மும்பை,

மறைந்த பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் வினய் துபே ஆகியோரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 'ஆகாசா ஏர்' விமான சேவை தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் இந்தியாவில் வணிக ரீதியான விமானங்களை இயக்கி வருகிறது.

முதலில் மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான விமான சேவையை வழங்கி வந்த இந்நிறுவனம் தற்போது கூடுதல் வழித்தடங்களில் பயணிகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் பயணிகள் இனி தங்கள் செல்லப் பிராணிகளுடன் விமானத்தில் பயணம் செய்ய ஆகாசா ஏர் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. பயணிகள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் பயணம் செய்வதற்கான முன்பதிவு அக்டோபர் 15 முதல் தொடங்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இதை தொடர்ந்து நவம்பர் 1 முதல் செல்லப்பிராணிகள் விமானத்தில் பயணம் செய்யலாம் என ஆகாசா தெரிவித்துள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய பயண அனுபவத்தை உருவாக்க, செல்லப்பிராணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக 'ஆகாசா ஏர்' நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 7 கிலோ வரை எடையுள்ள செல்லப்பிராணிகள் விமானத்தில் அனுமதிக்கப்படும்.

இதன் மூலம் செல்லப்பிராணிகளை விமானங்களில் அனுமதிக்கும் இரண்டாவது விமான நிறுவனமாக ஆகாசா ஏர் மாறியுள்ளது. தற்போது வரை, ஏர் இந்தியா நிறுவனம் மட்டுமே நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் போன்ற வீட்டு செல்லப்பிராணிகளை விமானத்தில் பயணம் செய்ய அனுமதியளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்