'இந்து மதத்தினர் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும்' கருத்துக்கு மன்னிப்பு கோரிய பத்ருதீன் அஜ்மல்

இஸ்லாமிய மதத்தினர் போல் இந்து மதத்தினரும் தங்கள் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும் என்று பத்ருதீன் அஜ்மல் கூறினார்.

Update: 2022-12-03 21:06 GMT

கவுகாத்தி,

அசாம் எம்.பி.யும், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎப்) கட்சி தலைவருமான பத்ருதீன் அஜ்மல் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் அஜ்மல் கூறுகையில், இஸ்லாமிய மத ஆண்கள் 20-22 வயதில் திருமணம் செய்துகொள்கின்றனர். இஸ்லாமிய மத பெண்கள் அரசு அனுமதித்த வயதான 18 வயதில் திருமணம் செய்துகொள்கின்றனர்.

ஆனால், மறுபுறம் இந்து மதத்தினர் திருமணம் ஆவதற்கு முன்பே ஒன்று, இரண்டு அல்லது மூன்று மனைவிகளை சட்டவிரோதமாக வைத்துக்கொள்கின்றனர். அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. அவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு பணத்தை சேமிக்கின்றனர்.

இஸ்லாமிய மத மக்கள் தொகையை போன்று இந்து மத மக்கள் தொகை அதே அளவில் வளர்வதில்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் 40 வயதில் இந்து மதத்தினர் திருமணம் செய்துகொள்கின்றனர். 40 வயதுக்கு பின்னர் அவர்கள் குழந்தையை பெற்றுக்கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

வளமான நிலத்தில் விதைத்தால் மட்டுமே நல்ல விளைச்சல் கிடைக்கும். அப்போதுதான் வளர்ச்சி இருக்கும்.

இந்து மதத்தினரும் இஸ்லாமிய மதத்தினரின் பார்முலாவை பின்பற்றி அவர்களின் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும். இந்து மதத்தினர் தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு 20-22 வயதிலும், பெண் பிள்ளைகளுக்கு 18-20 வயதிலும் திருமணம் செய்துவைக்க வேண்டும். அதன் பின் எத்தனை குழந்தைகள் பிறக்கிறது என்பதை பாருங்கள்' என்றார்.

இந்நிலையில், பத்ருதீன் அஜ்மலின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்த நிலையில் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது வார்த்தைகள் யாருடைய உணர்வையும் புண்படுத்தி இருந்தால் நான் என் வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். யாருடைய உணர்வையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அரசு சிறுபான்மையினருக்கு நீதி, கல்வி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்