மராட்டிய அரசில் அஜித் பவார்..!! பா.ஜனதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

ஊழல் குற்றச்சாட்டை சந்திக்கும் தலைவர்களை கூட்டணியில் சேர்த்து பதவி வழங்கிய பா.ஜனதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.;

Update: 2023-07-03 01:36 GMT

Image Courtacy: ANI

புதுடெல்லி,

மராட்டிய மாநில அரசில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்தது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'வாஷிங் மெஷின்'

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதாவின் 'வாஷிங் மெஷின்' தனது வேலையை தொடங்கி விட்டது போலும். வாஷிங் மெஷின் அழுக்கு துணிகளை சுத்தமாக்குவது போல், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை சந்திப்பவர்கள், மராட்டிய மாநில பா.ஜனதா கூட்டணி அரசில் புதிதாக இணைந்தவுடன், நற்சான்றிதழ் பெற்று விட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

ஊழலை எதிர்ப்பதாக பேசக்கூடாது

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மேற்கு வங்காள மாநில தலைவருமான பாபுல் சுப்ரியோ கூறியிருப்பதாவது:-

ஊழலுக்காக அமலாக்கத்துறையின் விசாரணையில் இருக்கும் தலைவர்கள், தங்கள் கறையையும், களங்கத்தையும் போக்க பா.ஜனதா தயாரித்த வாஷிங் மெஷினில் போடப்பட்டுள்ளனர். இனிமேல், ஊழலை எதிர்ப்பதாக பா.ஜனதாவும், பிரதமர் மோடியும் பேசக்கூடாது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள், தங்களுக்கு மரியாதை இல்லை என்று விலகி விட்டன. வாஜ்பாயுடன் இருந்த மூத்த தலைவர்கள், தற்போதைய தலைமையை விமர்சித்து வருகிறார்கள்.

இத்தகைய பா.ஜனதாவில் நின்று வெற்றி பெற்ற எம்.பி. பதவியை ராஜினாமா செய்து நான் வெளியேறியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

தேசிய அளவில் தாக்கம் ஏற்படாது

ஐக்கிய ஜனதாதள தேசிய செய்தித்தொடர்பாளர் கே.சி.தியாகி கூறியிருப்பதாவது:-

அஜித் பவாருடன் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி மிரட்டப்பட்டுள்ளனர்.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, பா.ஜனதாவுக்கு பயத்தை புகுத்தியதன் விளைவுதான் இந்த நிகழ்வு. இருப்பினும், இது தேசிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அவர் கூறியுள்ளார்.

ஊழலின் பாதுகாவலர்

ஆம் ஆத்மி தேசிய செய்தித்தொடர்பாளர் சஞ்சய்சிங் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஊழலுக்கு மிகப்பெரிய பாதுகாவலரே பிரதமர் மோடிதான். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என்று 2 நாட்களுக்கு முன்பு அவர் உத்தரவாதம் அளித்தநிலையில், அஜித் பவாரும், சாகன் புஜ்பாலும் மராட்டிய அரசில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அனைத்து டி.வி. சேனல்களும் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கபில் சிபல்

முன்னாள் மத்திய மந்திரியும், சுயேச்சை எம்.பி.யுமான கபில் சிபல் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது கூறிய 'ஜனநாயகத்தின் தாய்' என்பது இதுதான் போலும் என்று அவர் கூறியுள்ளார்.

அதிகார வெறியை தணிக்க..

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி கூறியிருப்பதாவது:-

மராட்டிய மாநிலத்தில் மக்கள் தீர்ப்பை மீண்டும் குழிதோண்டி புதைத்திருக்கும் பா.ஜனதாவை கண்டிக்க வார்த்தைகளே இல்லை. ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி, தங்கள் அவமானகரமான செயல்களுக்கு தேசிய கீதத்தை கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.

ஒருபக்கம், ஊழல் குற்றச்சாட்டுகளின்பேரில், அரசியல் எதிரிகளை பா.ஜனதா கைது செய்கிறது. மற்றொரு பக்கம், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. பா.ஜனதாவின் அதிகார வெறியை தணிக்க மக்கள் வரிப்பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்