அஜித்பவார் அணிக்கு கடிகாரம் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம் : சுப்ரீம்கோர்ட்டை நாடுவோம் - சரத்பவார் தரப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித்பவார் அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.;
மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலை அடுத்து, அந்த மாநிலத்தில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள் நடந்து வருகிறது. உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடந்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் எதிர்பாராத வகையில் பிளவு ஏற்பட்டது.
அந்த கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியை உடைத்து பா.ஜனதா ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றினார்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மராட்டியத்தில் மற்றொரு அரசியல் பூகம்பம் ஏற்பட்டது. சரத்பவார் தலைமையில் செயல்பட்டு வந்த தேசியவாத காங்கிரஸ் உடைந்தது. சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார் கட்சியை உடைத்து பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் தேசியவாத காங்கிரசை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களும் மந்திரி பதவி ஏற்றனர்.
இதனால் 53 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் சரத்பவார், அஜித்பவார் தலைமையில் 2 அணிகளாக செயல்பட்டு வந்தது. அஜித்பவார் அணிக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. சரத்பவார் தரப்புக்கு 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்தநிலையில் அஜித்பவார் நாங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். கட்சியின் பெயர், சின்னத்தை தங்கள் அணிக்கு தர வேண்டும் என அவரது தரப்பு கோரியது. இதை எதிர்த்து சரத்பவார் தரப்பு பதில் மனு தாக்கல் செய்தது. இருதரப்பு மனுக்களையும் தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது.
இந்தநிலையில் நேற்று இரவு தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் வழக்கின் முடிவை வெளியிட்டது. இதில் அஜித்பவார் அணி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவித்தது. கட்சியின் பெயர், கடிகாரம் சின்னமும் அவரது அணிக்கே வழங்கப்படுவதாக தெரிவித்தது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், "இருஅணிகளும் கட்சியின் விதிகளுக்கு எதிராக செயல்பட்டு உள்ளன. இந்த சூழல் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள அணிக்கு சாதகமாகி உள்ளது" என கூறப்பட்டுள்ளது.
இதேபோல தேர்தல் ஆணையம் சரத்பவார் அணிக்கு புதிய கட்சி பெயரை தேர்வு செய்ய சலுகை வழங்கி உள்ளது. அவர்கள் இன்று (புதன்கிழமை) மதியத்துக்குள் கட்சியின் புதிய பெயர் குறித்த 3 விருப்பங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய அறிவிப்பு குறித்து துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறுகையில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது. அதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி" என்றார். ஆனால் மத்திய ஆட்சியாளர்கள் அழுத்தம் காரணமாக தேர்தல் ஆணையம் முடிவை அறிவித்து இருப்பதாக சரத்பவார் அணியை சேர்ந்த முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் முடிவு கட்சியின் நிறுவனர் சரத்பவார் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று சரத் பவார் அணியின் தலைவர் ஜிதேந்திர அவாத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், சரத் பவார் ஒரு பீனிக்ஸ் பறவை. அவர் சாம்பலில் இருந்து எழுவார். இது நடக்கப் போகிறது. இது எங்களுக்கு முன்பே தெரியும். இன்று அவர் (அஜித் பவார்) சரத் பவாரை அரசியல் ரீதியாக தாக்கியுள்ளார். இதற்குப் பின்னால் அஜித் பவார் மட்டுமே இருக்கிறார். இதனால் வெட்கப்படுவது தேர்தல் ஆணையம் ஆகும்" என்று அவர் தெரிவித்தார்.