டெல்லியில் மிக மோசமடைந்த காற்றின் தரம்; நிலைமை தொடரும் என எச்சரிக்கை
டெல்லியில் காற்று தர குறியீட்டு அளவில் காற்றின் தரம் 326 என்ற அளவில் இன்று காலை பதிவாகி உள்ளது.;
புதுடெல்லி,
டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிக மோசமடைந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் வெளியே செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. சுவாச மற்றும் பார்வை கோளாறுகள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகரித்து உள்ளன. மருத்துவமனைகளில் சேருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் காற்று தர குறியீட்டு அளவில் காற்றின் தரம் 326 என்ற அளவில் இன்று காலை பதிவாகி உள்ளது. இது மிக மோசம் என்ற பிரிவில் உள்ளது.
கடந்த வாரம் கடுமையான பிரிவில் 3 நாட்களுக்கு நீடித்த இந்த நிலைமை சற்று மாறியுள்ளது. தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் மோசமடைய கூடிய நிலைமை ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, டெல்லி என்.சி.ஆர். பகுதியில் தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து காணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக உள்ள நொய்டாவில் காற்று தர குறியீடு 356 (மிக மோசம் பிரிவில்) ஆக உள்ளது.
குருகிராமில் காற்று தர குறியீடு 364 என தொடர்ந்து மிக மோசம் பிரிவிலேயே உள்ளது. காற்று தர குறியீடு பூஜ்யம் முதல் 50-க்குள் இருப்பது நலம் என்றும் 51 முதல் 100 என்பது மித அளவிலும், 101 முதல் 150 வரை என்பது உடனடியாக பாதிப்பிற்கு இலக்காகும் குழுக்களுக்கு சுகாதாரமற்றது என்றும், 151 முதல் 200 வரை அனைத்து தரப்பினருக்கும் சுகாதாரமற்றது என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
201 முதல் 300 வரை அதிக பாதிப்பு ஏற்படுத்தும் சுகாதாரமற்ற நிலை மற்றும் 301 முதல் 500 வரை மனித சுகாதாரத்திற்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலக அளவில் காற்று தரம் பற்றி மதிப்பீடு செய்து காற்று மாசு பற்றி குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உதவிடவும் வகையில் 2007-ம் ஆண்டு உலக காற்று தர குறியீடு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு கடந்த அக்டோபரில், ஆசிய நாடுகளில் அதிக மாசடைந்த நகரங்கள் பற்றி ஆய்வு செய்து டாப் 10 நகரங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10-ல் இடம் பெற்று அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் குருகிராம் நகரம் உள்ளது. இதன் காற்று தர குறியீடு 679 புள்ளிகள் என்ற அளவில் உள்ளது. இதனை தொடர்ந்து, ரேவாரி நகர் அருகே உள்ள தருஹெரா (543) மற்றும் பீகாரில் உள்ள முசாபர்பூர் (316) ஆகிய நகரங்கள் உள்ளன.
இதுதவிர, லக்னோவுக்கு உட்பட்ட டாகடோர், பெகுசராய்க்கு உட்பட்ட டி.ஆர்.சி.சி. ஆனந்த்பூர், திவாஸ்க்கு உட்பட்ட போபால் சவுரஹா, கல்யாணுக்கு உட்பட்ட கதக்பாத, சாப்ராவுக்கு உட்பட்ட தர்சன் நகர் ஆகிய 5 நகரங்கள் அடுத்தடுத்து பட்டியலில் இடம் பெற்று உள்ளன. இவை அனைத்தும் காற்று தர குறியீட்டில் 200-க்கும் கூடுதலான புள்ளிகளுடன் உள்ளன. இந்த வரிசையில் பெருமளவில் வடமாநிலங்கள் இடம் பெற்று உள்ளன.