வடமாநிலங்களில் கடுமையாக மோசமடைந்த காற்று தர குறியீடு; அதிர்ச்சி தகவல்

டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று தர குறியீடு கடுமையாக மோசமடைந்து உள்ளது.

Update: 2022-11-05 02:27 GMT



புதுடெல்லி,


நாட்டின் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று தர குறியீடு சில நாட்களாக மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், மத்திய புவி அறிவியல் அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் தொடர்ந்து காற்றின் தரம் குறைந்து வருகிறது.

இதன்படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு 431 ஆக உள்ளது என தெரிவித்து உள்ளது. இதேபோன்று உத்தர பிரதேசத்திற்கு உட்பட்ட நொய்டா நகரில் காற்று தர குறியீடு 529 ஆக பதிவாகி உள்ளது.

அரியானாவுக்கு உட்பட்ட குருகிராம் நகர் (478) கடுமையான பிரிவிலும், அதற்கருகே உள்ள தீர்ப்பூர் நகர் (534) கடுமையான பிரிவிலும் உள்ளன. டெல்லியில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே பனி சூழ்ந்தது போன்ற காட்சிகள் காலையிலேயே காணப்படுகின்றன. இதனால், வாகனங்களில் பயணிப்பவர்கள் மெதுவாகவே செல்கின்றனர்.

சமீபத்தில், உலக காற்று தர குறியீடு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10-ல் இடம் பெற்று அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனினும், இதில் டெல்லி இடம்பெறாமல் இருந்தது.

ஆனால், தீபாவளி நாளில் அதிக மாசுபாடுடைய நகரங்களின் வரிசையில் டெல்லி முதல் இடம் பிடித்து விட்டது என அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது. பட்டாசு வெடிக்க தடை, அபராதம் என விதிக்கப்பட்டபோதும், அதனை மீறி பல பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு விபத்து சம்பவங்களும் பதிவாகின.

இந்த நிலையில், டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று தர குறியீடு கடுமையாக மோசமடைந்து உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்