விமானத்தில் காபி கொட்டியதால் பெண் பயணி காயம்: ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்டது
விமானத்தில் காபி கொட்டியதால் பெண் பயணி காயம் அடைந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
கடந்த 20-ந்தேதி, டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அதில், ஒரு பெண் பயணி, தன்னுடைய 4 வயது மகன், 83 வயது மாமியார் ஆகியோருடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, விமான உதவியாளர் ஒருவர், தட்டில் எடுத்துச் சென்ற சூடான காபியை தவறுதலாக கொட்டி விட்டதாகவும், அது தனது காலில் பட்டு காயம் அடைந்ததாகவும் அந்த பயணி 2 நாட்களுக்கு பிறகு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். தான் மிகுந்த வலியுடன் இருந்ததாகவும், சிறிது நேரத்துக்கு பிறகே ஒரு டாக்டர் வந்து சிகிச்சை அளித்ததாகவும், விமானம் தரையிறங்கிய பிறகு தன்னுடைய குடும்பத்தினரை விமான நிறுவனம் கண்டுகொள்ளவில்லை என்றும் அப்பயணி கூறியிருந்தார். இந்நிலையில், இச்சம்பவத்துக்காக பெண் பயணியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.