விமானத்தில் குறை பைலட் புகார்: ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம்
இந்த மாதத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இது இரண்டாவது முறை அபராதம் என்பது குறிப்பிடத்தக்கது.;
புதுடெல்லி,
சில நீண்ட தூர வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களும் ஒன்றாகும். வெகு தூரம் செல்லும் விமானங்களுக்கு சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அமைத்துள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் போதிய ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் விமானி விமானத்தை எடுக்க மறுத்துள்ளார். மேலும் இது பற்றி சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்திடம் விமானி புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விரிவான விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்கு ஏர் இந்தியா சரியாக ஒத்துழைக்கவில்லை. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது.
கடந்த வாரம், பனிமூட்டத்தில் விமானங்களுக்கு போதுமான ஏற்பாடுகளைச் செய்யாததற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.