விமானப்படை பயிற்சி அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
விமானப்படை பயிற்சி அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
பெங்களூரு: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அங்கித் குமார் ஜா (வயது 27). இவர் விமானப்படையில் அதிகாரியாக பணி செய்ய தேர்ச்சி பெற்று இருந்தார். இதையடுத்து பெங்களூரு ஜாலஹள்ளி பகுதியில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான தொழில்நுட்ப கல்லூரியில் அங்கித் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் தான் தங்கி இருந்த அறையில் அங்கித் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்ததும் ஜாலஹள்ளி போலீசார் அங்கு சென்று அங்கித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அங்கித் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் 6 அதிகாரிகள் பெயரை குறிப்பிட்டு இருந்ததாகவும், அந்த அதிகாரிகள் தனக்கு தொல்லை கொடுத்தனர் என்று எழுதி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து கங்கமனகுடி போலீசார் 6 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.