வங்காள தேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
டாக்காவில் இருந்து ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலம் 205 இந்தியர்கள் இன்று காலை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.;
புதுடெல்லி,
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து வங்காளதேசத்தில் உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, டெல்லியில் இருந்து டாக்காவிற்கு விமான சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இண்டிகோ, விஸ்தாரா நிறுவனங்கள் வங்காளதேச தலைநகருக்கான அனைத்து விமானங்களையும் நேற்று ரத்து செய்தன. அதேபோல ஏர் இந்தியா நிறுவனமும் டாக்காவிற்கு செல்ல இருந்த காலை விமானத்தை ரத்து செய்தது. ஆனால் மாலை விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் டாக்காவிற்கு இயக்கியது.
இந்த நிலையில், வங்காள தேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வங்காள தேச தலைநகர் டாக்காவில் இருந்து 6 குழந்தைகள் உள்பட 205 இந்தியர்கள் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலம் இன்று காலை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இதேபோல், இண்டிகோ சிறப்பு விமானம் ஒன்று டாக்காவில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்களை கொல்கத்தாவுக்கு அழைத்து வந்துள்ளது.
இந்தியாவில் இருந்து டாக்காவிற்கு மீண்டும் விமான சேவைகளை தொடங்க விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இண்டிகோ டெல்லி, மும்பை மற்றும் சென்னையில் இருந்து டாக்காவிற்கு தினசரி ஒரு விமானத்தையும், கொல்கத்தாவில் இருந்து தினசரி இரண்டு சேவைகளையும் இன்று இயக்குகிறது. அதேபோல விஸ்தாரா மும்பையிலிருந்து தினசரி விமானங்களையும், டெல்லியிலிருந்து டாக்காவிற்கு வாராந்திர மூன்று சேவைகளையும் இயக்குகிறது. இதேபோல ஏர் இந்தியாவும் தனது சேவைகளை இன்று தொடங்கியது.