அகமதாபாத்தில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

குஜராத்தில் 25 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

Update: 2024-05-06 09:17 GMT

அகமதாபாத்,

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகங்கள் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனே மின்னஞ்சல்கள் வந்த பள்ளிகளுக்கு காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பள்ளிகளில் அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின் நிறைவில் அது புரளி என்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியை தொடர்ந்து அகமதாபாத் பள்ளிகளுக்கும் அதே ரஷிய டொமைனில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து சைபர் குற்றவியல் துறை காவல்துறை அதிகாரி கூறுகையில், இந்த மின்னஞ்சல் வந்த கணினி முகவரி இந்தியாவுக்கு வெளியே இருந்து வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

முன்னதாக மே 1ம் தேதி, டெல்லி-என்சிஆர் முழுவதும் 150 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மின்னஞ்சல் ரஷிய மின்னஞ்சல் சேவை நிறுவனத்தின் மெயில்.ஆர்யு வழியாக வந்திருப்பதாக சைபர் குற்றவியல் துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்டர்போல் உதவியை நாடி, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகளை கண்டுபிடிக்குமாறு காவல்துறையினர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.  3-வது கட்ட தேர்தலில் குஜராத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் (25 தொகுதி) நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்