2023 பட்ஜெட்டின் முக்கிய தகவல்களை கசியவிட்ட நிதி அமைச்சக ஊழியர் கைது
2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கியமான தகவல்களை கசியவிட்டதற்காக நிதி அமைச்சக ஊழியர்களை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.
புதுடெல்லி
2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார். இதற்காக கடந்த சில மாதங்களாகவே, பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பட்ஜெட் குறித்த தகவல்கள் வெளியில் கசிந்து விடக் கூடாது என்பதற்காக, பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் மிகவும் ரகசியமாக நடக்கும். பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். அத்தனை கெடுபிடகளையும் மீறி, பட்ஜெட் உரையின் சில பகுதிகள் பாகிஸ்தானுக்கு கசியவிடப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மத்திய பட்ஜெட் அறிக்கையின் குறிப்பிட்ட சில பகுதிகள் நிதி அமைச்சகத்தில் பணியாற்றும் ஊழியர் மூலமாகவே பாகிஸ்தானுக்கு 'லீக்' ஆகியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தில் பணியாற்றும் சுமித் என்ற ஊழியர், வாட்ஸ் அப் வாயிலாக பட்ஜெட் அறிக்கையின் சில பகுதிகளை பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமித் பணம் வாங்கிக்கொண்டு நிதி அமைச்சகம் தொடர்பான ரகசிய தகவல்களை வெளிநாடுகளைச் சேர்ந்த அவரது கூட்டாளிகளிடம் விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்ஜெட் அறிக்கை தகவல்களை அனுப்ப அவர் பயன்படுத்திய மொபைல் போன் கைப்பற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சுமித் மீது குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், வேறு ஏதேனும் அரசு தொடர்பான ரகசிய தகவல்களை அவர் வெளிநாடுகளுக்கு பகிர்ந்துள்ளாரா என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சுமித் உடன் பணியாற்றும் மற்ற ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. சுமித்தின் வங்கிக் கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக டெல்லி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்
டேட்டா ஆபரேட்டராக பணிபுரியும் சுமித் என்ற ஒப்பந்த ஊழியர் உளவு நெட்வொர்க்குடன் இணைந்து கைது செய்யப்பட்டுள்ளார். பணத்தை வாங்கி கொண்டு நிதியமைச்சகத்தின் தகவல்களை கசியவிட்டு, வெளிநாடுகளுக்கு ரகசியத் தகவல்களை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.