அக்னி வீரர்களுக்கு பாதுகாவலர் பணி: பா.ஜனதா தலைவர் கருத்தால் சர்ச்சை
அக்னி வீரர்களுக்கு பாதுகாவலர் பணி வழங்கப்படும் என்று கூறிய பா.ஜனதா தலைவரின் கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
புதுடெல்லி,
அக்னிபத் திட்டம் தொடர்பாக இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா, 'ராணுவத்தில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேறும் அக்னி வீரர்கள் ரூ.11 லட்சத்துடன், அக்னி வீரர்கள் என்ற பெருமிதத்துடன் இருப்பார்கள்' என்று கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, 'இந்த பா.ஜனதா அலுவலகத்தில் எனக்கு பாதுகாவலர்கள் இருந்தால், நான் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன்' என்று தெரிவித்தார்.
அவரது இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ராணுவ வீரர்களை அவமதித்து விட்டதாகவும், அக்னி வீரர்கள் இவ்வாறு பா.ஜனதா அலுவலகத்தின் வாட்ச்மேனாக மாறும் நிலை குறித்துதான் அஞ்சுவதாகவும் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதைப்போல டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், பா.ஜனதா எம்.பி. வருண்காந்தி உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் தனது கருத்துகளை காங்கிரஸ் கட்சி திரித்து கூறுவதாக கைலாஷ் விஜய் வர்கியா குற்றம் சாட்டியுள்ளார். ராணுவ பணிகளை முடித்தபின் எந்த துறையிலும் அக்னி வீரர்களை பணியில் அமர்த்த முடியும் என்பதையே தான் கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்து உள்ளார்.