அக்னிபத் விவகாரம்; வன்முறையில் ஈடுபட்டால் நன்னடத்தை சான்று கிடைக்காது - விமானப்படை தளபதி எச்சரிக்கை

இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டால் காவல்துறையினரின் நன்னடத்தை சான்று கிடைக்காமல் போய்விடும் என விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி எச்சரித்துள்ளார்.

Update: 2022-06-18 18:05 GMT

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறியுள்ளன.

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடுவது பின்னடைவைத் தான் ஏற்படுத்தும் என இந்திய விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;-

"அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் போராட்ட வன்முறையை கண்டிக்கிறேன். வன்முறை என்பது எதற்கும் தீர்வாக அமையாது, பின்னடைவைத் தான் ஏற்படுத்தும். பாதுகாப்புத் துறையில் சேர விரும்புவோருக்கு காவல்துறையினரின் நன்னடத்தை சான்று அவசியம். வன்முறையில் ஈடுபட்டால் காவல்துறையினரின் நன்னடத்தை சான்று கிடைக்காமல் போய்விடும்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்