சொத்து குவிப்பு வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக- சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு தள்ளுபடி
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் டி.கே.சிவக்குமாரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க கோரி சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.;
பெங்களூரு:-
ஐகோர்ட்டு இடைக்கால தடை
கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கடந்த பா.ஜனதா ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்தது.
அதன்பேரில், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டி.கே.சிவக்குமார் மீது ஊழல் பிரிவின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். தன் மீது சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி வழங்கிய கர்நாடக அரசின் உத்தரவையும், சி.பி.ஐ. பதிவு செய்திருந்த வழக்கையும் ரத்து செய்ய கோரி டி.கே.சிவக்குமார் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
சி.பி.ஐ. மனு தள்ளுபடி
அந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் டி.கே.சிவக்குமாரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க கோரியும் சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முடியாது என்பதால், சி.பி.ஐ. தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதனால் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிம்மதி அடைந்துள்ளார்.