பாதயாத்திரைக்கு பிறகு ராகுல்காந்தியை புதிய அவதாரத்தில் பார்ப்பீர்கள்-திக்விஜய்சிங் சொல்கிறார்

பாதயாத்திரை முடிந்த பிறகு ராகுல்காந்தியை புதிய அவதாரத்தில் பார்க்க போகிறீர்கள் என்று திக்விஜய்சிங் கூறினார்.

Update: 2022-10-09 18:45 GMT

பெங்களூரு:

கட்சியை வலுப்படுத்தும்

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாதயாத்திரைக்காக கர்நாடகாவில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் அங்கு ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பாதயாத்திரைக்கு மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுதவிர, கட்சியின் துணை அமைப்புகளும் செயல்படுகின்றன. இது, கீழ்மட்ட அளவில் கட்சி செயல்பட வழிவகுத்துள்ளது. இந்த யாத்திரை, கட்சியை வலுப்படுத்தும்.காங்கிரசார் இப்போது வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். தெருவில் நிற்கின்றனர். சில தலைவர்கள் அகில இந்திய அரசியல் செய்வார்கள். ஆனால், டெல்லியில் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள்.

ஒற்றுமையின் அடையாளம்

இப்போது, பத்திரிகைகளும் எங்களை கவனிக்க ஆரம்பித்து விட்டன. இத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக மிகவும் உட்புற பகுதிகளிலும், கிராமங்களிலும் கூட காங்கிரசைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. இது, யாத்திரை ஏற்படுத்திய ஆக்கப்பூர்வமான மாற்றம். ராகுல்காந்தி வழியெங்கும் நடப்பதை பற்றி மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

நமது நாட்டில், தியாகம் செய்பவர்கள் எப்போதும் வணங்கப்படுவார்கள். சோனியாகாந்தி, பிரதமர் பதவியை தியாகம் செய்தார். ராகுல்காந்தி இப்போது நடக்கிறார். வெயிலிலும், மழையிலும் நடக்கிறார். பொய்ச் செய்திகளை எதிர்த்து போராடுகிறார்.

இந்திய ஒற்றுமையின் அடையாளமாக ராகுல்காந்தி திகழ்கிறார். பாதயாத்திரை முடிந்த பிறகு, அவரை புதிய அவதாரத்தில் பார்க்கப் போகிறீர்கள்.

ராகுல், ஆன்மிகவாதி

ராகுல்காந்தியை எனக்கு நீண்ட காலமாக தெரியும். அவர் எதையாவது செய்ய முடிவெடுத்து விட்டால், யார் தடுத்தாலும் நிற்க மாட்டார். அவர் கொள்கையில் மிகுந்த உறுதிப்பாடு கொண்டவர். தனது கேள்விக்கு பதில் கிடைக்கும்வரை உங்களை விட மாட்டார். நிறைய படிப்பவர். ஆன்மிகவாதியும் கூட. பா.ஜனதாவுடன் பணம் அடிப்படையில் ஒப்பிடுகையில் காங்கிரஸ் ஏழைக்கட்சி. ஆனால், காங்கிரஸ் ஒரு மக்கள் இயக்கம். கடந்த கால போராட்டங்களில் இருந்து புதிய தலைவர்கள் உருவானார்கள். அதுபோல், இப்போதும் புதிய தலைமை உருவாகும்.

அர்ப்பணிப்பு குறைவு

கொள்கை மீதும், தலைமை மீதும் கட்சியில் அர்ப்பணிப்பு உணர்வு குறைவாக உள்ளது. கட்சியும் குழப்பமான சமிக்ஜைகளை அளிக்கிறது.அங்கொன்றும், இங்கொன்றுமாக செயல்படுவதுதான், கட்சியின் பலவீனங்களில் ஒன்று. அடிமட்ட அளவில் கட்சியினர் ஒருங்கிணைப்பு இல்லை. அதை இந்த பாதயாத்திரையில் முயற்சி செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்