நவாப் மாலிக்கை ஆளும் கூட்டணியில் சேர்க்கக்கூடாது; அஜித்பவாருக்கு பட்னாவிஸ் கடிதம்
நவாப் மாலிக்கை கைது செய்த பின்னரும் மராட்டிய மந்திரிசபையில் தொடர அனுமதித்த அப்போதைய முதல்-மந்திரி மற்றும் முந்தைய மகா விகாஸ் அகாடி அரசை போல நாங்கள் செயல்பட முடியாது என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.;
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி நவாப் மாலிக் கடந்த ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை மந்திரி சபையில் இருந்து நீக்க பா.ஜனதா வலியுறுத்தியது. மேலும் அவர்கள் தீவிர போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்தநிலையில் சமீபத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் நேற்று நடந்த சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் அணியினர் அமர்ந்து இருந்த வரிசையில் உட்கார்ந்து இருந்தார். இதை உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்தது.
குறிப்பாக மேல்சபையில் இதுகுறித்து கடும் விவாதம் நடைபெற்றது. மேல்-சபை எதிர்க்கட்சி தலைவரான அம்பாஸ் தன்வே, ஒரு காலத்தில் பா.ஜனதாவால் பயங்கரவாதி மற்றும் துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட நவாப் மாலிக், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடன் தற்போது உரசியபடி அமர்ந்திருப்பதாக கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்த துணை முதல்-மந்திரி பட்னாவிஸ், "கடுமையான குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தும் நவாப் மாலிக்கை மந்திரி பதவியில் இருந்து நீக்காத மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிக்கு, பா.ஜனதா மற்றும் ஆளும் கூட்டணி கட்சிகளிடம் இந்த கேள்வியை கேட்க தார்மீக உரிமை இல்லை" என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் நவாப் மாலிக்கை ஆளும் கூட்டணியில் சேர்க்கக்கூடாது என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அஜித்பவாருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியதாவது:-
எம்.எல்.ஏ.வாக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க நவாப் மாலிக்கிற்கு உரிமை உள்ளது. அவர் மீது எங்களுக்கு தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை. எனினும் அவர் சிக்கியுள்ள வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு, அவரை ஆளுங்கூட்டணியில் (மகாயுக்தி) சேர்ப்பது சரியாக இருக்காது என்பது எங்களின் கருத்து. அதுமட்டும் இன்றி மாலிக் மருத்துவ ஜாமீனில் மட்டுமே வெளியே வந்துள்ளார். உங்கள் கட்சியில் யாரை சேர்க்க வேண்டும் என்பது உங்களின் முடிவு என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனினும் நவாப் மாலிக்கை சேர்த்தால் அது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூட்டணி கட்சிகள் நினைக்கலாம். எனவே நாங்கள் அவரை ஆளுங்கூட்டணியில் சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
அவரை கைது செய்த பின்னரும் மந்திரிசபையில் தொடர அனுமதித்த அப்போதைய முதல்-மந்திரி மற்றும் முந்தைய மகா விகாஸ் அகாடி அரசை போல நாங்கள் செயல்பட முடியாது
இவ்வாறு அவர் கூறினார்.