70 நாட்களுக்குப் பிறகு, வடகிழக்கு பகுதிகளில் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

தொடர் கனமழை மற்றும் வரலாறு காணாத நிலச்சரிவு காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

Update: 2022-07-17 21:12 GMT

கவுகாத்தி,

கடந்த மே 13 முதல் பெய்த கனமழை மற்றும் வரலாறு காணாத நிலச்சரிவு காரணமாக லும்டிங்-பதர்பூர் ஒற்றைப் பாதை ரயில் பாதையில் 61க்கும் மேற்பட்ட இடங்களில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

பல இடங்களில், கனமழை காரணமாக, ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்ததுடன், மிகப்பெரிய நிலச்சரிவுகள் தண்டவாளங்கள் மற்றும் பிற ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தின.

இந்த நிலையில், மணிப்பூர், திரிபுரா, மிசோரம் மற்றும் பராக் பள்ளத்தாக்கு (தெற்கு அசாம்) பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டை தவிர்க்க மற்றும் தேசிய போக்குவரத்தை மீண்டும் தொடங்க ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட இடங்களுக்கு சென்று இரவு பகலாக உழைத்து சரி செய்தனர்.


இதன் விளைவாக, ஏறக்குறைய 70 நாட்களுக்குப் பிறகு, வடகிழக்கு பகுதிகளில் பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்க உள்ளது. ஜூலை 22 அன்று அசாமில் லும்டிங்-பதர்பூர் இடையே பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.

இது திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் அசாமின் தெற்குப் பகுதியை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்