அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
புதுடெல்லி,
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள், நேரமின்மை காரணமாக அனைத்து வழக்குகளும் வேறு ஒரு நாளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
விரைந்து விசாரிக்க வேண்டும்
அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம், நிலுவையில் உள்ள மனுக்களால் வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே நாளை (இன்று) விரைந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
அதற்கு ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், தற்போதைய நிலையில் எவ்வித இடைத்தேர்தலும் அறிவிக்கப்படவில்லை என வாதிட்டார்.
தள்ளிவைப்பு
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.