பா.ஜனதாவின் ஆதரவு இல்லாமல் அ.தி.மு.க.வால் செயல்பட முடியாது

தமிழகத்தில் பா.ஜனதாவின் ஆதரவு இல்லாமல் அ.தி.மு.க.வால் செயல்பட முடியாது என்றும், அண்ணாமலை சரியான பாதையில் அரசியல் செய்கிறார் என்றும் சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-03-25 04:30 GMT

சிக்கமகளூரு-

தமிழகத்தில் பா.ஜனதாவின் ஆதரவு இல்லாமல் அ.தி.மு.க.வால் செயல்பட முடியாது என்றும், அண்ணாமலை சரியான பாதையில் அரசியல் செய்கிறார் என்றும் சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.

சிக்கமகளூருவில் நேற்று பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணாமலை

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் சரியான பாதையில் அரசியல் செய்து வருகிறார். அந்த மாநிலத்திற்கு அவர் செய்யும் அரசியல் சரியானதுதான். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று கூறுவது பா.ஜனதாவிற்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அவர் தமிழகத்தில் நேர்த்தியாக அரசியல் செய்து வருகிறார்.

அண்ணாமலை இதுபோன்ற கருத்துகளை கூறினால் மட்டுமே அ.தி.மு.க.வினர், பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க முன்வருவார்கள். ஏனென்றால் அ.தி.மு.க.வால், பா.ஜனதாவின் ஆதரவு இல்லாமல் செயல்பட முடியாது. தமிழகத்தில் பா.ஜனதா 1990-ம் ஆண்டு இருந்ததுபோன்று தற்போது வலுவாகவுள்ளது.

எதுவும் நிரந்தரம் இல்லை

மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமையும். கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி தான் வரும். திப்பு சுல்தான் பற்றி பேசுபவர்கள் இந்துக்கள் என்று கூறி கொள்ள தகுதி இல்லாதவர்கள். இந்துத்துவாவை பற்றி பேசும் அவர்கள், திப்பு சுல்தானுக்கும் கொடி பிடிக்கிறார்கள். இது அரசியல் ஆதாயத்திற்காக செய்யும் செயல்.

தத்தா பீட உரிமை, இந்துக்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த பரிசு. இந்த போராட்டத்தால் தற்போது அர்ச்சகரை மாநில அரசு நியமித்துள்ளது. பா.ஜனதாவில் நிரந்தர பதவி என்று யாருக்கும் கிடையாது. கட்சி தலைமைதான் நடவடிக்கை எடுக்கும். முடிவு எடுக்கும். கட்சி தலைவர்கள் அறிவிப்புதான் இறுதியானது. எனவே யாருக்கும் எதுவும் நிரந்தரம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்