பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அன்பரசன் வேட்பு மனு ஏற்பு; ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த 3 பேரில், ஒருவரின் மனு தள்ளுபடி

பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அன்பரசன் வேட்பு மனு ஏற்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த 3 பேரில், ஒருவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2023-04-21 22:17 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. போட்டியிட விரும்பியது. இதனை ஏற்க பா.ஜனதா மறுத்து விட்டது. இதையடுத்து, கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியில் மட்டும் போட்டியிடுவதாகவும், அங்கு அன்பரசன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் அறிவித்திருந்தார்.

அதன்படி, புலிகேசிநகர் தொகுதியில் அன்பரசன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று நடந்த வேட்பு மனு பரிசீலனையின் போது, அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். அதே நேரத்தில் கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தார். அதாவது புலிகேசிநகர், காந்திநகர், கோலார் தங்கவயல் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

அதன்படி, புலிகேசிநகரில் நெடுஞ்செழியனும், காந்திநகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனையின் போது நேற்று நெடுஞ்செழியனின் மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். வங்கி கணக்கு இல்லாதது, ஆவணங்களில் கையெழுத்து போடாமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் காந்திநகரில் குமார், கோலார் தங்கவயலில் அனந்தராஜ் ஆகிய 2 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்