பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு கூடுதல் மெமு ரெயில் இயக்கம்
பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு கூடுதல் மெமு ரெயில் இயக்கப்படுகிறது.;
பெங்களூரு: தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து பையப்பனஹள்ளியில் உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா முனைய ரெயில் நிலையத்திற்கு இருமார்க்கமாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மெமு ரெயில்கள் இயக்கப்படுகிறது. பையப்பனஹள்ளியில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 4 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் செல்கிறது. பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 10.05 மணிக்கு பையப்பனஹள்ளி செல்கிறது. இதுபோல விமான நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தேவனஹள்ளிக்கு மெமு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது கூடுதலாக மேலும் ஒரு ரெயில் இன்று முதல் இயக்கப்பட உள்ளது. பெங்களூருவில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 6.20 மணிக்கு தேவனஹள்ளிக்கு செல்கிறது. தேவனஹள்ளியில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 9.20 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. தேவனஹள்ளி-பெங்களூரு கன்டோன்மெண்ட் இடையிலும் மெமு ரெயில்கள் இயங்க உள்ளது. தேவனஹள்ளியில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்படும் ரெயில் காலை 10.10 மணிக்கு கன்டோன்மெண்ட் ரெயில் நிலையத்திற்கு வருகிறது. கன்டோன்மெண்டில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படும் ரெயில் தேவனஹள்ளிக்கு மதியம் 1.40 மணிக்கு செல்கிறது.
இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.