சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் அதிரடி கைது

கர்நாடகத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலை சி.ஐ.டி. போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இவர் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது.;

Update: 2022-07-04 21:43 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலை சி.ஐ.டி. போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இவர் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது.

எஸ்.ஐ. தேர்வு முறைகேடு

கர்நாடகத்தில் காலியாக இருந்த 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் (எஸ்.ஐ.) பணிகளுக்கு கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகின.

இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நடந்த தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், இதுகுறித்து அரசு விசாரிக்க வேண்டும் என்று கூறி பெங்களூருவில் உள்ள போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி அரசுக்கு தெரியவந்தது. இதனால் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க சி.ஐ.டி. போலீசாருக்கு அரசு உத்தரவிட்டு இருந்தது.

70 பேர் கைது

இதையடுத்து தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்த போது கலபுரகியில் உள்ள கல்லூரியில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கல்லூரியின் உரிமையாளரும், பா.ஜனதா பெண் பிரமுகருமான திவ்யா ஹாகரகி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அப்சல்புரா பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பட்டீல் என்ற ஆர்.டி.பட்டீல், ஆள்சேர்ப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாந்தகுமார், ஸ்ரீதர், என்ஜினீயர் மஞ்சுநாத், முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள், அதற்கு உதவிய போலீஸ்காரர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 70-க்கும் மேற்பட்டோரை சி.ஐ.டி. போலீசார் கைது ெசய்திருந்தனர்.

பணி இடமாற்றம்

இந்த நிலையில் இந்த தேர்வு முறைகேட்டில் ஆள்சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றிய அம்ருத் பாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து இருந்தார். ஆனாலும் அம்ருத் பாலை ஆள்சேர்ப்பு பிரிவில் இருந்து உள்நாட்டு பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி.யாக அரசு பணியிட மாற்றம் செய்தது.பின்னர் ஆள்சேர்ப்பு பிரிவு டி.ஜி.பி.யாக கமல்பந்த் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் தேர்வு முறைகேட்டில் அம்ருத் பாலுக்கு தொடர்பு இருப்பது பற்றி சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்து இருந்தது.

இதனால் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். இதையடுத்து 3 முறை சி.ஐ.டி. போலீசார் முன்பு அம்ருத் பால் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். அப்போது தேர்வு முறைகேட்டில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனக்கு தெரியாமல் முறைகேடு நடந்து உள்ளது. நான் நிரபராதி என்று அம்ருத்பால் கூறி இருந்தார். இதற்கிடையே இந்த வழக்கில் கைதாகி இருந்த ஆள்சேர்ப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமாரிடம், சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி இருந்தனர்.

தலா ரூ.25 லட்சம் பேரம்

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு செய்ய 25 பேரிடம் அம்ருத் பால் ஒப்பந்தம் செய்ததும், இதற்காக தலா ரூ.25 லட்சம் பேரம் பேசியதும் தெரியவந்தது. மேலும் 25 பேரிடமும் தன்னிடம் நேரடியாக பணம் கொடுக்க வேண்டாம் என்றும், சாந்தகுமார் மூலம் தனக்கு கொடுக்கும்படியும் கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் தேர்வில் முறைகேடு செய்தவர்களிடம் இருந்து வாங்கிய ரூ.5 கோடியை அம்ருத்பாலிடம் கொடுத்ததாக சாந்தகுமார் போலீசாரிடம் கூறி இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி அம்ருத்பாலுக்கு சி.ஐ.டி. போலீசார் 4-வது நோட்டீசு அனுப்பி இருந்தனர்.

அம்ருத்பால் கைது

அதன்படி நேற்று சி.ஐ.டி. போலீசார் முன்பு அம்ருத்பால் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அப்போது அவரிடம் சாந்தகுமார் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் துருவி, துருவி கேள்வி கேட்டனர். அப்போது அவர் பதில் அளிக்க முடியாமல் திணறி உள்ளார்.

பின்னர் தேர்வு முறைகேட்டில் தனது பங்கு இருப்பது பற்றி அம்ருத் பால் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கோர்ட்டில் ஆஜர்

இதையடுத்து பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் ஆஸ்பத்திரிக்கு அம்ருத் பாலை அழைத்து சென்ற போலீசார் அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் அவரை பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் முறைகேடு தேர்வில் அம்ருத் பாலுக்கு பங்கு இருப்பதால் அவரை கைது செய்து இருப்பதாகவும், அம்ருத் பால் அலுவலகத்தில் வைத்தே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு விடைத்தாள் திருத்தம் நடந்ததற்கு ஆதாரம் இருப்பதாகவும், தேர்வு விடைத்தாள் இருக்கும் அறை சாவியை அவர் மற்றவர்களிடம் கொடுத்து தவறாக பயன்படுத்திய ஆதாரம் சிக்கி இருப்பதாகவும் போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர்.

10 நாள் போலீஸ் காவல்

மேலும் அம்ருத் பாலை 14 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் அனுமதி கோரினர். அப்போது அம்ருத் பாலை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது அம்ருத் பால் கண்ணீர் விட்டு அழுததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கர்நாடகத்தில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றும் போது கைதான முதல் அதிகாரி அம்ருத் பால் என்பது குறிப்பிடத்தக்கது. அம்ருத் பால் கைதாகி இருப்பது சக போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்