அதானி குழுமத்தின் பங்குகள் 10% வீழ்ச்சி: ரூ.52,000 கோடி இழப்பு
அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் இதே போன்றதொரு விசாரணையை தொடங்கி நடத்தி வருவதாக செய்திகள் வந்தன.;
மும்பை
இந்தியாவில், பங்குச்சந்தையில் முதலீடு செய்து வரும் சிறு, குறு, மற்றும் மிகப் பெரிய முதலீட்டாளர்களை கடந்த சில ஆண்டுகளாக அதானி குழும பங்குகள் ஈர்த்து வந்தன. சில மாதங்களுக்கு முன்பு வரை அதானி குழுமத்தின் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும், முதலீட்டாளர்களுக்கு நல்ல வெகுமதி அளித்துள்ளன. அதன் தலைவர் கவுதம் அதானி இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர்.
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பெர்க் எனப்படும் முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம், ஜனவரி 2023ல், அதானி குழுமத்தின் கணக்கு வழக்குகளில் ஊழல் இருப்பதாகவும், வரி ஏய்ப்பு புகலிடமாக இருக்கும் சில நாடுகளில் அக்குழுமம் வலை நிறுவனங்களை உருவாக்கி, பங்குகள் கையாளுதலில் மோசடி செய்ததாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதனையடுத்து அதானி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. இதன் பிறகு ஏற்றத்தையும், இறக்கத்தையும் மாறி மாறி சந்தித்து வந்த அந்நிறுவனத்தின் பங்குகள், இன்று 10 சதவீத சரிவை சந்தித்துள்ளது. பட்டியலிடப்பட்ட 10 அதானி குழும நிறுவனங்கள் இன்று ரூ.52,000 கோடிக்கு மேல் ஒட்டுமொத்த சந்தை மூலதனத்தை இழந்துள்ளன.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள அமெரிக்க அட்டர்னி அலுவலகம், அதானி பங்குகளை அதிகளவில் வைத்திருக்கும் முதலீட்டாளர்களிடம் சமீபத்திய மாதங்களில் விசாரணையை முடுக்கி விட்டிருப்பதாகவும், முதலீட்டாளர்களிடம் அதானி குழுமம் என்ன சொன்னது என்பதில் பிரத்யேக கவனம் செலுத்தப்பட்டதாகவும் செய்தி வெளிவந்தது.
அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் இதே போன்றதொரு விசாரணையை தொடங்கி நடத்தி வருவதாக செய்திகள் வந்தன.
இந்தியாவை தளமாகக் கொண்ட அதானி குழுமத்தின் செய்தித்தொடர்பாளர், தனது முதலீட்டாளர்களிடம் எந்தவிதமான விசாரணையும் தொடங்கப்பட்டதற்கான எந்த தகவலும் தங்களுக்கு வரவில்லை என கூறினார். மேலும் அவர், அக்குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி, இதன் மூலம் அதானி பங்கு வீழ்ச்சியடையும் என கணித்து, "ஷார்ட் ஸெல்லிங்" எனப்படும் பங்குகள் விலை குறையும் பொழுது லாபமீட்டும் முறையை கையாண்டு பல கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பதிலுக்கு குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் விளைவாக பங்குகள் சரிந்திருந்தாலும், அடுத்த வாரம் அது மீண்டும் உயரக்கூடும் என வல்லுனர்கள் நம்புகின்றனர்.