நடிகை ரம்யாவை பா.ஜனதாவில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதா?

நடிகை ரம்யாவை பா.ஜனதாவில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதா என்பதற்கு மந்திரி ஆர்.அசோக் மறுப்பு தெரிவித்துள்ளார்.;

Update: 2023-04-23 18:45 GMT

பெங்களூரு:-

நடிகை ரம்யா

கர்நாடக திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த குத்து ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா திடீரென காங்கிரசில் சேர்ந்தார். பின்னர் மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர் திடீரென்று காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். அதுபோல் திரையுலகில் இருந்தும் விலகினார்.

தற்போது நடிகை ரம்யா, கன்னட திரையுலகில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சுதீப் எனது நண்பர்

இந்த நிலையில், நடிகை ரம்யா ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது கூறியதாவது:-

நடிகர் சுதீப் எனது சிறந்த நண்பர். அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதாக அறிவிப்பதற்கு முன்பு என்னிடம் கலந்தாலோசித்தார். அதுபோல் பல அரசியல் கட்சி பிரமுகர்களுடனும், நண்பர்களுடனும் பேசினார். அதன் பின்னரே பசவராஜ்பொம்மைக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு செய்தார். அது அவரது தனிப்பட்ட முடிவு. இதுபற்றி கருத்து கூற முடியாது.

நடிகர் சுதீப் அரசியலுக்கு வர வேண்டிய நல்ல மனிதர். அவர் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய ஆற்றல் கொண்டவர். அதனால் அவர் அரசியலுக்கு வரலாம். நடிகர் சுதீப் எப்போது வேண்டுமானாலும் செல்போனில் என்னிடம் நலம் விசாரிப்பார். அந்த அளவுக்கு நாங்கள் நண்பர்கள்.

பா.ஜனதாவில் சேர அழைப்பு

தன்னையும் தேர்தலில் போட்டியிடவும், தங்கள் கட்சியின் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவும் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல பா.ஜனதா கட்சியும் அழைத்தது. அக்கட்சி சார்பில் பிரசாரம் செய்யவும், தங்கள் கட்சியில் இணையவும் பா.ஜனதா தலைவர்கள் சிலர் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அக்கட்சியின் கருத்து, சித்தாந்தம், கோட்பாடுகள் மீது எனக்கு வேறுபாடு உள்ளது. அதனால் பா.ஜனதாவில் சேர முடிவு செய்யவில்லை.

அதுபோல் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமியும் தனது கட்சிக்குவரும்படி அழைத்தார். மேலும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் தருவதாகவும் கூறினார் என்று நடிகை ரம்யா கூறியிருந்தார்.

மந்திரி ஆர்.அசோக் பதில்

இதுகுறித்து கருத்து தெரிவித்த மந்திரியும், பத்மநாபநகர் மற்றும் கனகபுரா தொகுதிகளின் வேட்பாளருமான ஆர்.அசோக் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் கட்சி சார்பில் யாரும் நடிகை ரம்யாவை தொடர்பு கொள்ளவில்லை. அவரை பா.ஜனதாவில் சேரும்படி நாங்கள் அழைப்பு விடுக்க அவசியம் இல்லை. அந்த அளவுக்கு பா.ஜனதாவின் நிலை இல்லை.

லட்சுமண் சவதி, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் கட்சியை விட்டு செல்லும் போது கூட நாங்கள் அவர்களை கட்சியில் நீடிக்கும்படி கூறவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க நாங்கள் ஏன் நடிகை ரம்யாவை எங்கள் கட்சியில் சேரும்படி அழைப்பு விடுத்து இருப்போம்?. அவர் அரசியல் லாபத்திற்காக அவ்வாறு கூறியிருக்கலாம். பா.ஜனதாவுக்கு ஏராளமானோர் இருக்கிறார்கள். நடிகை ரம்யா பா.ஜனதாவுக்கு தேவை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்