மந்திரி ஆர்.அசோக்கிற்கு எதிராக நடிகை ரம்யா போட்டி?
கர்நாடக சட்டசபை தேர்தலில் மந்திரி ஆர்.அசோக்கிற்கு எதிராக நடிகை ரம்யா போட்டி? என்று தகவல் வெளியாகியுள்ளது.;
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வருகிறது. அதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பெங்களூரு பத்மநாபநகர் தொகுதியில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். அவரை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து வருகிறது. பலமான தலைவராக இருக்கும் மந்திரி.ஆர்.அசோக்கிற்கு எதிராக ஒரு பிரபலமான தலைவரை நிறுத்தினால் தான் கடும் போட்டியை ஏற்படுத்த முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
அதனால் பத்மநாபநகரில் நடிகை ரம்யாவை நிறுத்தலாமா? என்று காங்கிரஸ் ஆலோசிக்க தொடங்கியுள்ளது. ஒருவேளை பத்மநாபநகர் தொகுதி இல்லை என்றால், ராமநகர் அல்லது சன்னபட்டணாவில் ரம்யாவை நிறுத்துவது குறித்தும் காங்கிரஸ் ஆலோசனை நடத்தி வருகிறது. அதனால் இந்த முறை நடிகை ரம்யா சட்டசபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்னபட்டணாவில் ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவர் குமாரசாமியும், ராமநகரில் குமாரசாமி மகன் நிகிலும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.