திருப்பதி கோவிலில் தன்னை அவமானப்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை புகார்

திருப்பதி கோவிலில் டிக்கெட் இல்லை என கூறி தன்னை அவமானப்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Update: 2022-09-05 11:30 GMT

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த தன்னை டிக்கெட் இல்லை என கூறி அவமானப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் செல்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக உத்தர பிரதேஷ் மாநிலம் ஹஸ்தினாபுர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையிமான அர்ச்சனா கவுதம் கடந்த வாரம் வியாழக்கிழமை திருப்பதி வந்துள்ளார்.

அப்போது செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி அதன் பிறகு வி.ஐ.பி. டிக்கெட் ரூ.500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அங்கு உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி அந்த அலுவலகத்தில் இருந்தபடி செல்பி வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை நடிகை அர்ச்சனா கவுதம் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .அதில் இந்து மத ஸ்தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டதாகவும். மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விஐபி தரிசனம் என்ற பெயரில் ரூ.10,500 கேட்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்