பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் சித்திக்கின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

நடிகர் சித்திக்கின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

Update: 2024-09-24 08:41 GMT

திருவனந்தபுரம்,

பிரபல மலையாள நடிகரான சித்திக் மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் பொதுச்செயலாளராக இருந்தார். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின் மலையாள துணை நடிகையான ரேவதி சம்பத் நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது மலையாள திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியது. கடந்த 2016ம் ஆண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் அன்று இரவு திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அதே ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் சித்திக் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை சித்திக் ராஜினாமா செய்தார். புகாரின் பேரில் தற்போது சித்திக் மீது போலீசார் ஜாமீனில் வெளியே வராத வகையில் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், நடிகையும் சித்திக்கும் ஹோட்டலில் தங்கியதற்கான ஆதாரங்களை போலீசார் கைப்பற்றினர்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் முன் ஜாமீன் கோரியும் நடிகை சித்திக் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பாலியல் புகாரில் மலையாள நடிகர் சித்திக்கின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் கேரளா போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்