முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வலியுறுத்தல்
3 தலைமுறைக்கு சொத்து சேர்த்துள்ளோம் என்று பேசிய முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.;
பெங்களூரு:
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சோனியா காந்தியிடம் விசாரணை
காங்கிரஸ் தலைவர்கள் 3, 4 தலைமுறைக்கு தேவையான அளவுக்கு சொத்துகளை சேர்த்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ்குமார் கூறியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் தலைவர்கள் ஊழல்களை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் சபாநாயகராகவும் நாடகமாடினார். சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த கூடாது என்று வலியுறுத்தி காங்கிரசார் போராட்டம் நடத்துகிறார்கள்.
ஆனால் ரமேஷ்குமார் கூறிய கருத்துகள் மூலம் காங்கிரசார் ஊழலில் ஈடுபட்டனர் என்பது உறுதியாகியுள்ளது. அதனால் விசாரணை அமைப்புகள் ரமேஷ்குமாரின் கருத்து அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். முன்னாள் சபாநாயகரான ரமேஷ்குமார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.
இலவசமாக அரிசி
போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலையில் போலீசார், மந்திரியாக இருந்த கே.ஜே.ஜார்ஜ் எந்த தவறும் செய்யவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்தனர். இப்போது ஈசுவரப்பா மீதான குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அவர் குற்றமற்றவர் என்று போலீசார் கூறியுள்ளனர். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் ஒக்கலிகர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன.
அந்த ஒக்கலிகர்கள் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள். ஆனால் பா.ஜனதா சாதி அடிப்படையில் அரசியல் செய்வது இல்லை. கொரோனா பரவிய காலத்தில் ஏழை மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக அரிசி வழங்கியது. கூடுதல் அரிசி பெற்ற மக்கள் அதை விற்றதாக எங்களுக்கு தகவல் வந்தது. ஏழைகளுக்கு வழங்கப்படும் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.