போக்குவரத்து துறையில் 13 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கைமந்திரி ராமலிங்கரெட்டி பேட்டி
போக்குவரத்து துறையில் 13 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி ராமலிங்கரெட்டி பேட்டியளித்தார்.;
கலாசிபாளையா:-
போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நேற்று கலாசிபாளையா பஸ் நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ரூ.64 கோடியில் இங்கு புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு பிரச்சினைகள் இருப்பதாக பொதுமக்கள் எனக்கு புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நேரில் ஆய்வு செய்ய நான் இங்கு வந்தேன். இங்கு தூய்மை, மேற்கூரை பிரச்சினைகள் இருப்பதை அறிந்தேன். அந்த பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
தனியார் பஸ்களுக்கு மாத வாடகை ரூ.3 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. அதை மேலும் குறைத்து தினசரி வாடகையாக ரூ.50 வசூலிக்க உத்தரவிட்டுள்ளேன். தனியார் பஸ் உரிமையாளர்கள் பி.எம்.டி.சி.க்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற கூறியுள்ளேன்.
மெஜஸ்டிக்கில் பஸ் நிலையத்தில் இடம் போதவில்லை. அதனால் அங்கு மாடிகள் கட்டலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அரசு பஸ்களில் செல்போன் மூலம் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி வருகிற 25-ந் தேதி தொடங்கப்படுகிறது. போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 13 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.