சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹர்ஷா குடும்பத்தினர் கோரிக்கை
சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹர்ஷா குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.;
சிவமொக்கா;
சிவமொக்கா டவுன் சீகேஹட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா (வயது 24). பஜ்ரங்தள பிரமுகர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கில் தொடர்புடையதாக புத்தாநகர் பகுதியை சேர்ந்த முகமது ஹாசிப் உள்பட 10 பேரை கைது செய்தனர்.
அதையடுத்து அவர்கள் 10 பேரையும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் தீவிர விசாரணை மற்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹர்ஷா கொலை கைதிகள் செல்போனில் குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசுவது மற்றும் டிக்-டாக் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் ஹர்ஷாவின் பெற்றோர், சிறை அதிகாரிகள் பணம் வாங்கி கொண்டு ஹர்ஷா கொலை கைதிகளுக்கு ஆடம்பர வசதி செய்து கொடுப்பதாக குற்றம்சாட்டினர். மேலும், கைதிகளுக்கு ஆடம்பர வசதி செய்து கொடுக்கும் சிறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.