நடிகை ரம்யாவை 'கனவுக்கன்னி' என்று வர்ணித்த பா.ஜனதா எம்.பி. சர்ச்சையில் சிக்கினார்
நடிகை ரம்யாவை ‘கனவுக்கன்னி’ என்று வர்ணித்த பா.ஜனதா எம்.பி. சர்ச்சையில் சிக்கினார்.
பெங்களூரு:
கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ரிஷப் ஷெட்டி. இவரது மகளின் பிறந்தநாள் விழா சமீபத்தில் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் நடந்தது. இதில் நடிகை ரம்யா, பிரதாப் சிம்ஹா எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பங்கேற்ற பிரதாப் சிம்ஹா, நடிகை ரம்யாவை சந்தித்து பேசி அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் நடிகை ரம்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு 'என் கனவுக்கன்னியுடன் எடுக்கப்பட்ட புகைப்படம்' என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதாவைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹா எம்.பி., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் எம்.பி.யுமான நடிகை ரம்யாவை புகழ்ந்து பேசியிருப்பது பெரும் விவாத பொருளாக உருவாகி இருக்கிறது. பிரதாப் சிம்ஹாவின் செயலுக்கு பா.ஜனதாவைச் சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் பிரதாப் சிம்ஹா, 'அரசியல் வேறு, கலை வேறு, இரண்டையும் சேர்த்து பார்க்காதீர்கள்' என்று கூறியுள்ளார்.