தார்வார் அருகே லாரி மீது கார் மோதி 5 பேர் பலி
தார்வார் அருகே லாரி மீது கார் மோதி 5 பேர் பலியானார்கள்.;
பெங்களூரு:
தார்வார் அருகே லாரி மீது கார் மோதி 5 பேர் பலியானார்கள்.
அக்னி வீரர்
பெலகாவியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நடந்த அக்னி வீரர் தேர்வில் பங்கேற்றார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் அவரை அவரது குடும்பத்தினர் பெலகாவியில் இருந்து ஒரு காரில் அழைத்து கொண்டு உப்பள்ளிக்கு வந்தனர். அவர்கள் உப்பள்ளியில் உள்ள ராணுவ முகாமில் மஞ்சுநாத்தை விட்டுவிட்டு அங்கிருந்து பெலகாவிக்கு காரில் புறப்பட்டனர்.
காரில் டிரைவருடன் சேர்த்து மொத்தம் 8 பேர் பயணித்து வந்தனர். அவர்கள் பெலகாவி - தார்வார் தேசிய நெடுஞ்சாலையில் தேகூர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது இவர்கள் சென்ற கார் பயங்கரமாக மோதியது. மேலும் அதே வேகத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது கார் மோதியது.
5 பேர் பலி
இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரில் பயணித்து வந்த 4 பேரும், பாதசாரி ஒருவரும் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சம்பவம் குறித்து அறிந்த கரக போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விபத்தில் பலியானது அக்னி வீரர் மஞ்சுநாத்தின் குடும்பத்தைச் சேர்ந்த நாகப்பா ஈரப்பா முத்தோஜி(வயது 29), பெலகாவி மாவட்டம் அவராதி கிராமத்தைச் சேர்ந்த மகாந்தேஷ் பசப்பா முத்தோஜி(40), பசவராஜ் சிவபுத்ரப்பா நரகுந்தா(35), நிச்சனகி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகுமார் நரகுந்தா மற்றும் பாதசாரி ஈரண்ணா குருசித்தப்பா ராமனகவுடா(35) என்பதும் தெரியவந்தது. மேலும் 3 பேர் விபத்தில் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.